2 குழந்தைகளை கிணற்றுக்குள் வீசி கொன்றுவிட்டு இளம்பெண் மகனுடன் தற்கொலை முயற்சி; கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
போடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கிணற்றுக்குள் வீசி கொலை செய்த இளம்பெண், மகனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
போடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கிணற்றுக்குள் வீசி கொலை செய்த இளம்பெண், மகனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
குடும்ப பிரச்சினை
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர் ராமராஜ் (வயது 35). தோட்ட தொழிலாளி. அவருடைய மனைவி வீரமணி (28). இந்த தம்பதிக்கு ராஜபாண்டி (5) என்ற மகனும், ஈஷா (3), ஜீவிதா (2) ஆகிய 2 மகள்களும் இருந்தனர்.
ராமராஜூவுக்கும், வீரமணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று காலை வழக்கம்போல் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் ராமராஜ் வேலைக்கு சென்றுவிட்டார்.
கிணற்றுக்குள் வீச்சு
கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் வீரமணி விரக்தியடைந்தார். இதனால் அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது குழந்தைகளும் அனாதைகள் ஆகி விடுவார்கள் என்று அவர் கருதினார்.
எனவே தனது குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வீரமணி திட்டமிட்டார். இதனால் நேற்று மாலை வீரமணி, தனது 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்துக்கு வந்தார். பின்னர் தனது மனதை கல்லாக்கி கொண்டு, அங்குள்ள கிணற்றுக்குள் தனது குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக 3 பேரையும் தூக்கி வீசினார். அதன்பிறகு வீரமணியும் கிணற்றுக்குள் குதித்தார்.
உயிருக்கு போராட்டம்
70 அடி ஆழமுள்ள அந்த கிணறு தண்ணீரின்றி பாழடைந்து காணப்பட்டது. இதனால் வீரமணியும், அவரது குழந்தைகளும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ராமராஜிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ராமராஜ், மனைவி மற்றும் குழந்தைகள் கிணற்றுக்குள் தவிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ராமராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அவரும் கிணற்றுக்குள் குதித்தார்.
2 குழந்தைகள் சாவு
இதுதொடர்பாக போடி தாலுகா போலீசார் மற்றும் போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு படைவீரர்கள், ராட்சத ஏணி மூலம் கிணற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கிணற்றுக்குள் கூண்டு வலைகள், கயிற்றை வீசி தம்பதி மற்றும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராமராஜ், வீரமணி மற்றும் அவர்களது 3 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜீவிதா, ஈஷா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
3 பேருக்கு சிகிச்சை
ராமராஜ், வீரமணி மற்றும் ராஜபாண்டி ஆகியோருக்கு போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.