அய்யனார் கோவிலில் 2 உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை
பெண்ணாடம் அருகே அய்யனார் கோவிலில் உள்ள 2 உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் அதே ஊரைச்சேர்ந்த பூசாரியான காந்தி என்பவர் விட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த கோவிலில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.
வலைவீச்சு
இதனால் கோவில் உண்டியலில் 50 ஆயிரம் ரூபாய் இருந்து இருக்கலாம். அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.