சோலார் மின்விளக்கு பேட்டரிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது
கொள்ளிடம் அருகே சோலார் மின்விளக்கு பேட்டரிகளை திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சோலார் மின்விளக்கு பேட்டரிகளை திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
பேட்டரி திருட்டு
கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்விளக்கு பேட்டரியை 2 பேர் திருடி கொண்டிருந்தனர். இதை பார்த்த கிராம மக்கள், பேட்டரியை திருடிய 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து 2 பேரையும், அவர்கள் திருடிய பேட்டரியையும் போலீசாரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
2 சிறுவர்கள் கைது
பின்னர் திருடர்களை 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதான 2 சிறுவர்கள் என்பதும், இவர்கள் அந்த பகுதியில் 3 சோலார் மின்விளக்கு பேட்டரிகளை திருடியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களையும் கைது செய்து நாகை சிறுவன் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.