கடலூர் அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல் டிரைவர் உள்பட 5 பேர் பலி


கடலூர் அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல் டிரைவர் உள்பட 5 பேர் பலி
x

கடலூர் அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 5 பேர் பலியானார்கள். 91 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர்,

கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதேபோல் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. கடலூர் நோக்கி சென்ற பஸ்சை நெல்லிக்குப்பம் மோரை எவரஸ்ட்புரத்தை சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அங்காளமணி (வயது 36) என்பவர் ஓட்டினார்.

காலை வேளை என்பதால் 2 பஸ்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

கடலூர் அருகே மேல்பட்டாம்பாக்கம் நாராயணபுரம் மெயின்ரோட்டில் வந்தபோது, பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

நேருக்கு நேர் மோதல்

உடனே டிரைவர் அங்காளமணி சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பஸ் அவரது கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது.

இதை சற்று தொலைவில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் கவனித்தார். அவர் தனது பஸ்சை ஓரமாக நிறுத்துவதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பஸ்களின் முன்பக்கமும் உருக்குலைந்தது. பஸ்சில் இருந்த பயணிகளும், டிரைவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி அபயக்குரல் எழுப்பினர்.

5 பேர் பலி

இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களையும், படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தனியார் பஸ் டிரைவர் அங்காளமணி, பண்ருட்டி சேமகோட்டை சண்முகம் மகன் சீனிவாசன் (49), திருவெண்ணெய்நல்லூர் காந்திக்குப்பம் குப்புசாமி மகன் முருகன் (50), பண்ருட்டி மேல்கவரப்பட்டு தனபால் (60), பண்டரக்கோட்டை நடராஜன் (83) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 91 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் ஆறுதல்

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தலா ரூ.2 லட்சம் நிதியை வழங்கினர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.


Next Story