கமண்டல நதியில் மூழ்கி சென்னை வாலிபர்கள் 2 பேர் பலி
படவேடு அருகே கமண்டல நதியில் மூழ்கி சென்னை வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கண்ணமங்கலம்
படவேடு அருகே கமண்டல நதியில் மூழ்கி சென்னை வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கமண்டல நதியில் மூழ்கினர்
கண்ணமங்கலம் அருகே படவேடு வழியாக கமண்டல நதி ஓடுகிறது. நேற்று சென்னை கீழ்கட்டளை உள்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் 8 பேர் குழுவாக படவேடு பகுதியில் உள்ள ராமர் கோவிலை யூடியூப் சேனலுக்காக வீடியோ எடுக்க வந்து தங்கியிருந்தனர்.
பின்னர் இன்று மதியம் பிரகலாதன் என்பவர், தான் சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காக கமண்டல நதிக்கு சென்றார். அவருடன் நங்கநல்லூரை சேர்ந்த ஸ்ரீவர்ஷனும் சென்றார். அப்போது பிரகலாதன் கால் தவறி தண்ணீரில் விழுந்து விட்டார். இதனை பார்த்த ஸ்ரீவர்ஷன் அவரை காப்பாற்ற முயன்றபோது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.
பிணமாக மீட்பு
அவர்களை காப்பாற்ற போளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடியபோது 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். இருவரது உடல்களையும் அவர்கள் மீட்டனர்.
கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிவிப்பு பலகை
இந்த சம்பவம் நடந்த இடத்தில் பாறைகள் உள்ளன. இதனால் இங்கு வழுக்கி விழுந்து ஏற்கனவே பலர் இறந்துள்ளனர்.
எனவே அந்த இடத்தில் எச்சரிக்கை செய்யும் வகையில் அறிவிப்பு பலகை மற்றும் கம்பி வேலி அமைத்து யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.