செட்டியப்பனூர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு ஓராண்டு ஜெயில்


செட்டியப்பனூர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு ஓராண்டு ஜெயில்
x

செட்டியப்பனூர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு வேலூர் கோர்ட்டில் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா செட்டியப்பனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் வரையிலான காலக்கட்டத்தில் செயலாளராக ரகுநாதன், உதவி செயலாளராக ராமலிங்கம் ஆகியோர் பணியாற்றினர். அந்த காலக்கட்டத்தில் போலியான ஆவணங்கள் மூலம் 33 பேருக்கு பயிர்க்கடன் கொடுத்தது போன்று ரூ.12½ லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடி வங்கி தணிக்கையில் தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் கூட்டுறவு பதிவாளர் வேலூர் வணிக குற்றப்புலனாய்வு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-2) நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் உதவி வக்கீல் இந்திரா மிசையல் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து மாஜிஸ்திரேட்டு திருமால் தீர்ப்பு வழங்கினார். அதில் பயிர்க்கடன் கொடுத்தது போன்று ரூ.12½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட ரகுநாதன், ராமலிங்கம் ஆகியோருக்கு தலா ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story