ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள்


ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவாலாவில் ஒரே அறையில் 2 பேர் அமரும் வகையில் கழிப்பிடங்கள் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

கூடலூர்

தேவாலாவில் ஒரே அறையில் 2 பேர் அமரும் வகையில் கழிப்பிடங்கள் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவாலா பஜார்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும்போது தெருவில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் தெரு குழாய்களை அகற்றாமல் பணி மேற்கொண்டது பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்தை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோன்று ஒரே அறையில் பலர் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடங்கள் கட்டப்பட்டதும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா பஜாரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இங்குள்ள பஜார் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகே பொதுகழிப்பறை பராமரிப்பின்றி கிடந்தது. இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டது. பின்னர் நெல்லியாளம் நகராட்சி மூலம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.

அதிர்ச்சி

இதற்கிடையில் கழிப்பறை சீரமைப்பு பணி முடிந்ததால், அதை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்க்க சென்றனர். அப்போது கழிவறையை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, ஒரே அறையில் 2 பேர் அமரும் வகையில் கழிப்பறை அமைக்கப்பட்டு இருப்பதை கண்டனர். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. மேலும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஒரே அறையில் 2 கழிப்பிடம் அமைத்தது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story