கருமந்துறை வனப்பகுதியில் அழுகிய நிலையில் 2 பிணங்கள் மீட்பு-கொலையா? போலீசார் விசாரணை
கருமந்துறை வனப்பகுதியில் அழுகிய நிலையில் 2 பிணங்களை போலீசார் மீட்டனர். அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெத்தநாயக்கன்பாளையம்:
2 பிணங்கள் மீட்பு
பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கருமந்துறை கிளாக்காடு வனப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் நீல நிற பேண்ட், மஞ்சள் நிற டாப்ஸ் சுடிதார் அணிந்திருந்த ஒரு பெண் என 2 பேரின் உடல்கள் கிடந்தன. இது குறித்த தகவலின் பேரில் கருமந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த 2 உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால் அவர்கள் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் இருவரின் உடல்களும் வனப்பகுதிக்குள் இருப்பதால் அவற்றை உடனடியாக வெளியே கொண்டு வர முடியாமல் உள்ளது.
கொலையா? போலீசார் விசாரணை
இவர்கள் யார்? எதற்காக வனப்பகுதிக்குள் சென்றனர்? இவர்களுக்குள் ஏதேனும் கள்ளத்தொடர்பு உள்ளதா? அல்லது யாரேனும் இவர்களை கொலை செய்து உடலை வீசி விட்டு சென்று விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கருமந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.