அனுமதி சீட்டு இல்லாமல் விற்பனை செய்த 2 மருந்து கடைகள் மீது குற்றவியல் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்த 2 மருந்து கடைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்த 2 மருந்து கடைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
ஆய்வு கூட்டம்
குமரி மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியபோது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு போதைப் பொருட்கள் உட்கொள்ளும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நல் ஆலோசனை வழங்கி அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
செல்போன் எண்
மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அருகில் உள்ள கடைகளில் கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டதில் புகையிலை, சிகரெட் போன்ற பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சுமார் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடல் வழியாக தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் மாவட்டத்திற்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறை துணை இயக்குனர், காவல்துறை உள்ளிட்ட அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வாரமும் கடற்கரை கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் போதைப் பொருட்கள் விற்கும் நபர்கள் குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
குற்றவியல் நடவடிக்கை
மருந்தகம் மற்றும் மொத்த மருந்து விற்பனை இடங்களில் ஆய்வு செய்ததில் 2 மருந்தகங்களில் மருத்துவர்களின் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் உடலில் பாதிப்பு ஏற்படக்கூடிய மருந்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த கடைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மருந்தகம் மற்றும் மொத்த மருந்து விற்பனையாளர்கள் மீது கடும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், வருவாய் நுண்ணறிவு துணை இயக்குனர் ராம் கிருஷ்ணன் (இந்திய வருவாய் பணி), நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) இலக்குவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.