ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா


ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா
x

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடையன்குடி, குட்டம், கரைச்சுத்து உவரி மற்றும் உவரி ஆகிய பஞ்சாயத்துகளில் மாவட்ட பஞ்சாயத்து நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதிகளின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளது.

அதாவது இடையன்குடியில் இளைஞர்களுக்கு வண்ண உடற்பயிற்சி கூடம், கரைச்சுத்து உவரி பஞ்சாயத்தில் அங்கன்வாடி மையம், குட்டம் பஞ்சாயத்து வெம்மணங்குடியில் கலையரங்கம், உவரி பஞ்சாயத்தில் வலைபின்னும் கூடம், ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம், பல்வேறு தெருக்களில் வண்ணக்கற்கள் பதிக்கும் பணி ஆகியவற்றுக்கு ரூ.2 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்து கொண்டு, இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரேமண்ட், ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திசையன்விளை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கஸ்தூரி ரெங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திலகேஷ் வர்மா வரவேற்று பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ரகுபதி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, கஸ்தூரி ரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் வாழவந்த கணபதி ஆகியோர் பேசினர். டாக்டர்கள் ராபின், அர்ச்சனா தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர். முகாமில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. முடிவில், டாக்டர் ஜெயம் பெல்சி நன்றி கூறினார்.


Next Story