ரூ.2½ கோடியில் புதைவழி மின்தடம் அமைக்கும் பணி


ரூ.2½ கோடியில் புதைவழி மின்தடம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஆழித்தேரோடும் வீதிகளில் ரூ.2½ கோடியில் புதைவழி மின்தடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

திருவாரூர்

-

திருவாரூர் ஆழித்தேரோடும் வீதிகளில் ரூ.2½ கோடியில் புதைவழி மின்தடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆழித்தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூருக்கு வருகை தருவது வழக்கம். அப்போது தேரோடும் வீதிகளில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதால் ஆழித்தேரோட்டம் நடைபெறும்போது மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்படும்.

இந்த மின் தடை காரணமாக திருவாரூருக்கு வருகை தரும் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

மேலும் சாலையை கடக்கும் மின் இணைப்புகள் துண்டித்து, தேர் கடந்த பிறகு மீண்டும் மின் வினியோகத்தை சீரமைப்பது போன்ற பணி சுமையும் மின் ஊழியர்களுக்கு நிலவி வந்தது.

ரூ.2 கோடியே 48 லட்சம்

தேரோட்டத்தை சிரமம் இன்றி சிறப்பாக நடத்த புதைவழி மின்தடம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மின்சாரத்துறை அமைச்சர், திருவாரூர் தேரோடும் வீதிகளில் புதைவழி மின்தடம் அமைக்கப்படும் என அறிவித்து, இதற்காக ரூ.2 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருவாரூர் கீழவீதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ.2 கோடியே 48 லட்சம் செலவில் ஆழித்தேரோடும் 4 வீதிகள் மற்றும் சுவாமி ஊர்வலம் வரும் பகுதிகளில் உயர்அழுத்த மின்பாதைகளை புதைவழி மின்தடமாக மாற்றும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

கோரிக்கை நிறைவேறியது

அப்போது கலெக்டர் சாருஸ்ரீ கூறியதாவது:-

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோடும் வீதிகளில் உள்ள உயர்அழுத்த மின் கம்பிகள் மற்றும் தாழ்வு அழுத்த மின்கம்பிகளை புதைவழி மின்தடமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்யை அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆழித்தேரோட்டத்தில் நிறைவடைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுரேஷ்குமார், செயற்பொறியாளர் (பொது) காளிதாஸ், செயற்பொறியாளர் செந்தமிழ் செல்வி, நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், நகரமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர் மற்றும் பலர் இருந்தனர்.


Next Story