ஆட்டோக்கள் மோதல்; வடமாநில பக்தர்கள் 2 பேர் பலி


ஆட்டோக்கள் மோதல்; வடமாநில பக்தர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதிய விபத்தில் வட மாநில பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி,

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதிய விபத்தில் வட மாநில பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சாமி தரிசனம் செய்ய வந்தனர்

ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியை சென்று பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து பஸ் ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். இவ்வாறு வந்த பக்தர்கள் பல குழுவாக பிரிந்து ஆட்டோக்களில் தனுஷ்கோடி பகுதியை பார்க்க சென்றுள்ளனர். இதில் வேர்க்கோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒன்றில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 6 பேர் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

இந்த ஆட்டோவை வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன்(வயது 25) ஓட்டினார். தனுஷ்கோடி சென்று விட்டு ராமேசுவரம் நோக்கி 6 பேரும் அதே ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஜடாயு தீர்த்தம் அருகே உள்ள தனுஷ்கோடி சாலையில் வந்தபோது அங்ே்க நின்று கொண்டிருந்த மற்றொரு ஆட்டோ மீது வேகமாக மோதியது.

2 பேர் பலி

இதில் மோதிய ஆட்டோவில் இருந்த மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த அசோக்டாங்கே(63) மற்றும் மங்களாபாய் (74) ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் குல்கர்னி ஆனந்த் (61) என்பவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 2 பேரின் உடலும் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டனுக்கும் மற்றும் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்த டிரைவர் முருகனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ேசாகம்

ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர்கள் ஆட்டோக்கள் மோதிய விபத்தில் இறந்த சம்பவம் உடன் வந்த உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story