தக்கலை அருகே பரிதாபம்: சிவாலய தரிசனத்துக்கு சென்ற 2 பக்தர்கள் விபத்தில் பலி
தக்கலை அருகே சிவாலய தரிசனத்துக்கு சென்ற 2 பக்தர்கள் விபத்தில் பரிதாபமாக இறந்தனர்.
தக்கலை,
தக்கலை அருகே சிவாலய தரிசனத்துக்கு சென்ற 2 பக்தர்கள் விபத்தில் பரிதாபமாக இறந்தனர்.
சிவாலய தரிசனம்
குமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சிவாலய ஓட்டம் புகழ்பெற்றது. சிவராத்திரியையொட்டி 12 சிவாலயங்களுக்கு ஓட்டமும், நடையுமாக நேற்றுமுன்தினம் மாலை முதல் பக்தர்கள் சென்றனர்.
இதுபோக கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் பக்தர்கள் 12 கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர். இந்த சிவாலய ஓட்டத்தில் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர்.
அதன்படி கேரளாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து சிவாலய தரிசனத்தில் பங்கேற்ற 2 பக்தர்கள் இரவு 7.30 மணிக்கு எதிர்பாராதவிதமாக விபத்தில் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கேரள பக்தர்கள்
கேரள மாநிலம் கோவளம் அருகில் உள்ள விழிஞ்ஞம் வெங்னானூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ் (வயது 54), ராஜன் (55). மரம் வெட்டும் தொழிலாளிகள்.
இவர்கள் உள்பட 8 பேர் நேற்று நடந்த சிவாலய ஓட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பங்கேற்றனர். முதலில் திருமலை மகாதேவர் கோவிலில் சாமியை தரிசனம் செய்து விட்டு ஒவ்வொரு கோவிலாக சென்று கொண்டிருந்தனர். முதலாவதாக ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜ் மற்றும் ராஜன் பயணம் செய்தனர். மோட்டார் சைக்கிளை ராஜ் ஓட்டினார்.
2 பேர் விபத்தில் பலி
திருவிதாங்கோடு மகாதேவர் கோவிலுக்கு செல்ல தக்கலை அருகே புலியூர்குறிச்சியை கடந்து கொல்லன் விளை வள்ளியாற்று பாலம் அருகில் சென்ற போது ராஜின் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேருடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்தது எப்படி?
இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், "வாகனம் மோதிய விபத்தில் 2 பக்தர்கள் பலியானார்களா? அல்லது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்து பலியானார்களா? என்பது சரிவர தெரியவில்லை. எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் விபத்து காட்சி பதிவாகி உள்ளதா? என ஆய்வு நடத்தி வருகிறோம்" என்றனர்.சிவாலய தரிசனத்துக்கு வந்த இடத்தில் 2 கேரள பக்தர்கள் விபத்தில் பலியான சம்பவம் குமரியில் சோகத்தை ஏற்படுத்தியது.பலியான ராஜிக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ராஜனுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.