ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்


ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
x

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதுதொடா்பாக 2 ரெயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதுதொடா்பாக 2 ரெயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ரெயில்வே ஊழியர்கள் மோதல்

நாகர்கோவிலில் இருந்து காச்சிக்குடா வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படுவது வழக்கம். அதன்படி காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் நேற்று காலை 9 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.

அந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் கார்டு பணியில் மதுரை மாட்டுதாவணியை சேர்ந்த நாகபாண்டி (வயது 36) என்பவர் இருந்தார். அப்போது நாகபாண்டிக்கும் கோட்டார் ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் ரெயில்வே ஊழியரான நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த சுஜின் (30) என்பவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தாமதமாக புறப்பட்ட ரெயில்

இதனை கண்ட பயணிகள், சக ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களது சண்டையை தடுத்து நிறுத்தி எச்சரித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஊழியர் சுஜினுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே நாகபாண்டியும், சுஜினும் தனித்தனியாக ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரெயில்வே ஊழியர்களின் மோதல் சம்பவத்தால், காலை 9 மணிக்கு புறப்பட வேண்டிய காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில், சுமார் 1 மணி நேரம் தாமதமாக நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

பணியிடை நீக்கம்

மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே உயர்மட்டக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் நாகபாண்டி, சுஜின் ஆகியோரை ரெயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.


Next Story