கோபி அருகே 2 போலி டாக்டர்கள் கைது; பிளஸ்-2 படித்த மருந்து கடைக்காரரும் சிக்கினார்
கோபி அருகே 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பிளஸ்-2 படித்த மருந்து கடைக்காரரும் சிக்கினார்.
கடத்தூர்
கோபி அருகே 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பிளஸ்-2 படித்த மருந்து கடைக்காரரும் சிக்கினார்.
திடீர் சோதனை
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எர்ரம்பாளையத்தில் ஓமியோபதி படித்துவிட்டு தந்தை, மகன் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக ஈரோடு மருத்துவ சுகாதாரத்துறை இணை இயக்குனர் அம்பிகாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அம்பிகா மற்றும் அதிகாரிகள், போலீசார் கொண்ட குழுவினர் நேற்று எர்ரம்பாளையத்தில் உள்ள வெங்கடேஸ்வரன் (வயது 47) என்பவர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
போலி டாக்டர்கள் கைது
சோதனை நடந்த வீட்டில் ஆங்கில மருந்துகள், ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்கள் உள்பட சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் இருந்தன. இதனால் போலீசார் வெங்கடேஸ்வரனிடம் நீங்கள் ஆங்கில மருத்துவர் என்பதற்கான சான்றுகளை தாருங்கள் என்று கேட்டனர்.
அப்போது அவர் தான் ஆங்கில மருத்துவம் படிக்கவில்லை என்றும், ஓமியோபதி படித்துவிட்டு மகனுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து வெங்கடேஸ்வரன் மற்றும் அவருடைய மகன் ஜோதி பிரசாத் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் இருந்து ஆங்கில மருந்துகள், உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மருந்து கடைக்கு சீல்
இதேபோல் கோபி காசிபாளையத்தில் செயல்பட்டு வந்த ஒரு மருந்து கடையில் அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை செய்தனர். அப்போது மருந்து கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (47) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் மருந்தாளுனர் படிப்பு படிக்கவில்ைல என்பதும், பிளஸ்-2 முடித்துவிட்டு மருந்துக்கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் மருந்துக்கடையை பூட்டி சீல் வைத்தனர்.
கோபியில் ஒரே நாளில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டதும், மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.