பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது
பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம்:
ரத்த பரிசோதனை நிலையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாஜி (வயது 47). இவர் அப்பகுதியில் சிவப்பிரியா என்ற பெயரில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் உடல்நிலை சரியில்லை என்று வரும் பொதுமக்களுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த ரத்த பரிசோதனை நிலையத்தில் சோதனை நடத்த பெரம்பலூர் மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோகன் உத்தரவிட்டார்.
கைது
அதன்பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி நேற்று முன்தினம் இரவு அந்த ரத்த பரிசோதனை நிலையத்தில் சோதனை செய்தார். அப்போது மருத்துவம் செய்ய ராஜாஜிக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜாஜியை கைது செய்து அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வி.கைகாட்டியில்...
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோகன் மற்றும் போலீசார், வி.கைகாட்டியில் உள்ள ஆதித்யா கிராமம் குடியிருப்புக்கு எதிரே உள்ள அம்மன் மருந்து கடையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அந்த கடையை நடத்தி வந்த வெற்றியூர் அண்ணா நகர் காலனி தெருவை சேர்ந்த கருப்பையாவின் மனைவி கலைச்செல்வி(34) என்பவர், மருத்துவம் செய்ய உரிய அங்கீகாரம் இல்லாமலும், ஆங்கில மருத்துவம் படிக்காமலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்து, மாத்திரை மற்றும் ஊசி ஆகியவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து, கலைச்செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.