தம்மம்பட்டி அருகே வேன் மோதி 2 விவசாயிகள் பலி
தம்மம்பட்டி அருகே வேன் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 விவசாயிகள் பலியாகினர்.
தம்மம்பட்டி:
விவசாயிகள்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்துள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்புக்கரசன் (வயது 52). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் முகமதுகான் (40). விவசாயியான இவர், அன்புக்கரசனிடம் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு அன்புக்கரசனும், முகமதுகானும் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க தம்மம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அன்புக்கரசன் ஓட்டி சென்றார்.
2 பேர் பலி
தம்மம்பட்டி அருகே சவாணபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆட்களை ஏற்றி செல்லும் வேன் வந்தது. இந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு, அன்புக்கரசன், முகமதுகான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தம்மம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான 2 விவசாயிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனை ஓட்டி வந்த மெட்டாலா பகுதியை சேர்ந்த மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வேன் மோதி 2 விவசாயிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.