மொபட் மீது கார் மோதியதில் 2 விவசாயிகள் பலி
மொபட் மீது கார் மோதியதில் 2 விவசாயிகள் பலி
பொங்கலூர்
பொங்கலூர் அருகே சாலையை கடக்கும் போது மொபட் மீது கார் மோதிய விபத்தில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயிகள்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கோவில்பாளையம்புதூரை சேர்ந்தவர் சின்னராமசாமி (வயது 65). அதே ஊரை சேர்ந்தவர் மனோகரன் (60).
விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று காலை மொபட்டில் அவினாசிபாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்திற்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாராபுரம்-திருப்பூர் சாலையில் சிறிது தூரம் வந்தனர். மொபட்ைட சின்னராமசாமி ஓட்டினார். பின்னால் மனோகரன் அமர்ந்து இருந்தார். மொபட் அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்ததும் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்துசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மொபட் மீது கார் மோதி 2 விவசாயிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.