கோவில் உண்டியலில் மோட்டார் சைக்கிள் மோதி 2 நண்பர்கள் பரிதாப சாவு
செங்கோட்டை அருகே, கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது கோவில் உண்டியலில் மோட்டார்சைக்கிள் மோதியதில் 2 நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மோட்டை கிராமத்தைச் சேர்ந்த நல்லையா மகன் ஆகாஷ் (வயது 19). செங்கோட்டை மேலூர் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் ஜெகன் (19). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் செங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அங்கு கோவில் கொடை விழா நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு தேன்பொத்தை இறக்கத்தில் கலங்காதகண்டி செல்லும் பாதையில் முத்துமாரியம்மன் கோவில் அருகில் மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி முத்து மாரியம்மன் கோவில் முன்பு இருந்த உண்டியல் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி வழக்குப்பதிவு செய்தார். கோவில் திருவிழா நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நண்பர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.