இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
x
தினத்தந்தி 14 April 2023 12:30 AM IST (Updated: 14 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி பகுதியில் நடந்த விபத்துகளில், இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

திண்டுக்கல்

விபத்தில் பெண் பலி

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ரவி. கடந்த 2007-ம் ஆண்டு இவர் தனது மனைவி முத்தம்மாளுடன் (வயது 37) மொபட்டில் பழனிக்கு சென்று கொண்டிருந்தார். பழனி அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் இவரது மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் முத்தம்மாள் உயிரிழந்தார். இதனையடுத்து ரவி குடும்பத்தினர் சார்பில், விபத்து இழப்பீடு கேட்டு பழனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அரசு பஸ் ஜப்தி

இந்த வழக்கில், கடந்த 2021-ம் ஆண்டு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் ரவி சார்பில் பழனி கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த கூடுதல் சார்பு நீதிபதி ஜெயசுதாகர், ரவி குடும்பத்துக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.9 லட்சத்து 30 ஆயிரத்து 869 வழங்க வேண்டும், இல்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று கோர்ட்டு பணியாளர்கள் பழனி பஸ்நிலையத்தில் இருந்து கணியூர் செல்வதற்கு நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர்.

மற்றொரு வழக்கு

இதேபோல் சத்திரப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த தங்கப்பாண்டி (21) என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு பழனியை அடுத்த காவலப்பட்டி சென்றபோது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக தங்கப்பாண்டி சார்பில் இழப்பீடு கோரி பழனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கிலும் வட்டியுடன் சேர்த்து இழப்பீடு தொகையான ரூ.7 லட்சத்து 15 ஆயிரத்து 916 வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி பழனி பஸ்நிலையத்தில் இருந்து திருச்சி செல்வதற்காக நின்ற பஸ்சை கோர்ட்டு பணியாளர்கள் ஜப்தி செய்தனர். விபத்து இழப்பீடு வழங்காததால் பழனியில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story