பள்ளத்தில் ஒரே நேரத்தில் சிக்கிய 2 அரசு பஸ்கள்
தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரே நேரத்தில் 2 அரசு பஸ்கள் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
தக்கலை,
தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரே நேரத்தில் 2 அரசு பஸ்கள் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்
தக்கலையில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் பத்மநாபபுரம் பகுதியில் சாலையில் குழி தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடாததால் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு தக்கலையில் இருந்து திற்பரப்பரப்பு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பத்மநாபபுரம் சந்திப்பு பகுதியில் சென்ற போது சாலையோரம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது. பஸ்சின் சக்கரம் மண்ணில் புதைந்தது. இதை கண்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பஸ்சை தள்ளி மேலே கொண்டு வந்தனர். இதற்கிடையே அந்த பஸ் மேற்கொண்டு இயக்க முடியாமல் பழுதானது.
மற்றொரு பஸ் சிக்கியது
இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகளை வேறு அரசு பஸ்களில் ஏற்றி விட்டப்பட்டனர். பழுதான பஸ் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனால் இந்த வழியாக வந்த வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் சென்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் இரவு 7.30 மணிக்கு மற்றொரு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் பத்மநாபபுரம் சந்திப்பில் வந்த போது அங்கு ஏற்கனவே ஒரு பஸ் பழுதாகி நின்றதால், அதன் இடது புறமாக செல்ல முயன்றது. அப்போது சாலையின் மறுபுறம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் அந்த பஸ்சின் சக்கரம் புதைந்தது. இதனால் அந்த பஸ்சையும் இயக்க முடியவில்லை.
ஒரே நேரத்தில் 2 பஸ்கள் சாலையில் நின்றதால் அந்த வழியாக வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் அவதி
சாலையின் இரண்டு பக்கமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவற்றில் வந்த பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதை பார்த்த அந்த பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சிலர் சேர்ந்து பள்ளத்தில் புதைந்த பஸ்சை தள்ளி கரையேற்றினர். பின்னர் அந்த பஸ் தக்கலை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த பஸ் சென்ற சிறிது நேரத்தில் ஏற்கனவே பழுதாகி நின்ற பஸ்சரி செய்யப்பட்டு அதுவும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து இரவு 8 மணியளவில் போக்குவரத்து சீரானது.
ஒரே நேரத்தில் 2 அரசு பஸ்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் புதைந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
----------