பெண் உள்பட 2 போிடம் ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.64 ஆயிரம் அபேஸ்
உளுந்தூர்பேட்டையில் உதவி செய்வது போல் நடித்து அடுத்தடுத்து பெண்உள்பட 2 பேரிடம் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.64 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
உளுந்தூர்பேட்டை
ஏ.டி.எம். மையம்
உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(வயது 50). இவர் சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க சென்றிருந்தார். அங்கு தனக்கு பணம் எடுக்க தெரியாததால் அருகில் நின்றிருந்த டிப்டாப் நபரிடம் பணத்தை எடுத்து தருமாறு கூறினார். உடனே ஏ.டி.எம்.கார்டை வாங்கிய அந்த மர்ம நபர் ரகசிய குறியீட்டு எண்ணையும் அறிந்து கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை சொருகினார். ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றி போட்டு பணம் வரவில்லை என்று கூறினார். இதை கேட்டு அந்தபெண் அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.56 ஆயிரம் அபேஸ்
பின்னர் தன்னிடம் இருந்த ேபாலி ஏ.டி.எம்.கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்ற மர்ம நபர் பெண்ணின் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை மற்றும் விருத்தாசலத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ரூ.56 ஆயிரம் பணத்தை எடுத்து உள்ளார். இதுபற்றிய விவரம் கலைச்செல்வியின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மர்மநபர் தனக்கு உதவி செய்வதுபோல் நடித்து தனது ஏ.டி.எம்.கார்டை நூதன முறையில் திருடி பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது.
போலீஸ் வலைவீச்சு
பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்.மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை திருடி பணத்தை அபேஸ் செய்த டிப்டாப் நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். ஏ.டி.எம். எந்திரத்தில் டிப்டாப் நபர் மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டீ மாஸ்டர்
இதேபோல் இன்னொரு நபரிடமும் டிப்-டாப் நபர் கைவரிசை காட்டி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(50). டீ மாஸ்டாரன இவர் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றபோது அங்கிருந்த டிப்-டாப் நபர் அவருக்கு உதவி செய்வது போல் நடித்து அவரது ஏ.டி.எம்.கார்டை திருடிச்சென்று வேறு ஏ.டி.எம்.மையத்தில் ரூ.8, ஆயிரத்து 500 பணத்தை எடுத்து அபேஸ் செய்துள்ளார்.
இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் கைவரிசை காட்டி இருப்பது தொியவந்துள்ளது. அடுத்தடுத்து பெண் உள்பட 2 பேரிடம் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் திருடி ரூ.64 ஆயிரத்து 500-ஐ மர்மநபர் அபேஸ் செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.