சக மாணவன் கொடுத்த ஆசிட் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவனின் 2 சிறுநீரகங்கள் செயலிழப்பு...!
குளிர்பானம் குடித்த மாணவன் தொண்டை, குடல், இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கேரள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் அஸ்வினுக்கு 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது. அதை தொடர்ந்து அவரது தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார். மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் அஸ்வின் ஆசிட் திரவம் உட்கொண்டதாகவும் அதனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து மாணவனின் தாயார் அஸ்வினிடம் கேட்டபோது பள்ளியில் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுதிவிட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அப்பள்ளியை சேர்ந்த அடையாளம் தெரியாத ஒரு மாணவன் குளிர்பானம் கொடுத்தாகவும் அந்த குளிர்பானத்தை குடித்ததாகவும் அது முதல் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் தான் பயத்தால் வீட்டில் சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து பள்ளியில் படிப்பில் ஏற்பட்ட போட்டியா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மாணவருக்கு சக மாணவனின் தாயார் விஷம் கொடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியது.
அதேபோல கன்னியாகுமரியில் தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவனுக்கு அப்பள்ளியில் படிக்கும் சகமாணவன் குளிர்பானத்தில் விஷம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.