15 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி
ஜவ்வாதுமலை புதூர்நாடு பகுதியில் நிலத்தில் ஏர் ஓட்டிவிட்டு திரும்பியபோது 15 அடி பள்ளத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திருப்பத்தூர்
ஜவ்வாதுமலை புதூர்நாடு பகுதியில் நிலத்தில் ஏர் ஓட்டிவிட்டு திரும்பியபோது 15 அடி பள்ளத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஏர் ஓட்டினர்
திருப்பத்தூர் தாலுகா ஜவ்வாதுமலை புதூர் நாடு, சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது 25), அங்கதான்வலசை, கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் கோவிந்தன் (25), டிராக்டர் டிரைவர்.
அதேப்பகுதியில் உள்ள ஒருவருடைய நிலத்தில் ஏர் ஓட்டுவதற்காக கோவிந்தன் சென்றுள்ளார். அப்போது அவருடன் மணிகண்டனும் சென்றுள்ளார். நிலத்தில் ஏர் ஓட்டிவிட்டு திருப்பியபோது, டிராக்டருக்கு டீசல் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். சித்தூர் கூட் டுரோடு அருகே 15 அடி உயர செங்குத்தான மலைப் பகுதியில் டிராக்டரை ஓட்டிச்சென்றுள்ளனர்.
டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி
உச்சிப்பகுதியில் சென்றபோது டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 15 அடி உயரத்திலிருந்து தலைகீழாக உருண்டு அடிவாரத்திற்கு வந்து விழுந்தது. இதில் டிராக்டரில் இருந்த மணிகண்டன் மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பழனி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.