பாலத்தில் கார் மோதியதில் 2 பேர் பலி
விருதுநகர் அருகே பால தடுப்பு சுவரில் கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே பால தடுப்பு சுவரில் கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஐ.டி. நிறுவன ஊழியர்
சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் பூர்ண சந்திரசேகர் (வயது 25). இவர் மதுரையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் நவநீதன். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் இவர் பட்டப்படிப்பு முடித்த கோவை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு பூர்ண சந்திரசேகர், தனது பெற்றோர் கணேஷ் பாபு(47), மகேஸ்வரி(46), உறவினர் முத்துலட்சுமி(49), உறவினர் மகன் தருண்குமார்(9) ஆகியோருடன் கோவை செல்ல திட்டமிட்டார்.
சிவகாசி சிவானந்த நகரை சேர்ந்த தனது நண்பரான வீரபாண்டி(48) என்பவருக்கு தெரிந்தவரின் காரில் கோவைக்குச் சென்றனர். வீரபாண்டி தனது நண்பர் சிவகாசியை சேர்ந்த வெற்றி(31) என்பவரையும் உடன் அழைத்துச் சென்றார்.
கார் மோதியது
கோவையில் பட்டமளிப்பு விழா முடிவடைந்த பின்பு பூர்ண சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் காரில் சிவகாசி திரும்பினார். காரை வீரபாண்டி ஓட்டி வந்தார்.
இந்த கார் விருதுநகர்-சிவகாசி இடையே ஜி.என்.பட்டி அருகில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதியது. இதனால் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
2 பேர் பலி
கார் தடுப்பு சுவரில் மோதியதில் காரை ஓட்டிவந்த வீரபாண்டி மற்றும் அவருடன் இருந்த வெற்றி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரில் இருந்த பூர்ண சந்திரசேகர், அவரது பெற்றோர் கணேஷ் பாபு, மகேஸ்வரி மற்றும் உறவினர் முத்துலட்சுமி, சிறுவன் தருண் குமார் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்த 5 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பூர்ண சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.