மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
வெவ்வேறு சம்பவத்தில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியாகினர்.
வாகனம் மோதல்
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள துளிப்பட்டியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 58). இவரது மகன் தர்மராஜ் (13). இந்தநிலையில் சம்பவத்தன்று சீரங்கன் மற்றும் தர்மராஜ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் துளிப்பட்டியில் இருந்து மேட்டுப்பட்டி துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். தரகம்பட்டி-மேட்டுப்பட்டி சாலையில் அக்கரைப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தந்தை பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சீரங்கன் படுகாயம் அடைந்தார். தர்மராஜ் லேசான காயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சீரங்கனை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சீரங்கனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சீரங்கன் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தர்மராஜ் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து சீரங்கனின் மருமகன் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளியணை
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா குமாரப்பட்டியை சேர்ந்தவர் கண்ணம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் வெள்ளியணையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மணப்பாறையில் இருந்து பஸ் மூலம் வெள்ளியணைக்கு வந்தார். பின்னர் வெள்ளியணை பஸ் நிறுத்தத்தில் இறங்கி கரூர்-பாளையம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வெள்ளியணை அருகே உள்ள கந்தசாரப்பட்டி முத்துக்குளியூரை சேர்ந்த சதீஷ்குமார் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கண்ணம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்ணம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.