குவாரியில் கல் சரிந்து 2 பேர் பலி


குவாரியில் கல் சரிந்து 2 பேர் பலி
x

குவாரியில் கல் சரிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, அவரது உடலையும் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). இவர் அரசு உரிமம் பெற்று கவுள்பாளையத்தில் கல் குவாரி நடத்தி வருகிறார். இந்த குவாரி முருகேசனின் இளைய சகோதரர் சுப்பிரமணி(40) மேற்பார்வையில் இயங்கி வந்தது.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 80 அடி ஆழமுள்ள கல்குவாரியில் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்ததாக தெரிகிறது. கருங்கல்லை ஏற்றிச் செல்வதற்காக அங்கு லாரி டிரைவர் பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்(32) நின்று கொண்டிருந்தார்.

2 பேர் சாவு

சுப்பிரமணி குவாரியின் மேற்புறத்தில் நின்று கொண்டு, தொழிலாளிகளுக்கு பணியை பிரித்து கொடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவர் நின்று கொண்டிருந்த குவாரியின் மேற்புறம் திடீரென சரிந்தது. இதில் கல் மற்றும் மண் சரிவால் பாறைகளுக்கு இடையே சிக்கிய சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நடந்தபோது மேற்பகுதியில் இருந்து குவாரிக்குள் கற்கள் சிதறி விழுந்தன.

இதில் குவாரியின் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்த செந்தில்குமாரின் கழுத்துப்பகுதியில் ஒரு கல் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரும் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குவாரி மூடப்பட்டது.

சாலை மறியல்

இந்த நிலையில், உயிரிழந்த செந்தில்குமார் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.1 கோடியை தமிழக அரசு வழங்க வலியுறுத்தி பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரி அருகே அவரது உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய தொழிலாளி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடலையும் வாங்க மறுத்துவிட்டனர்.

கல்குவாரி விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் முருகேசன், மேலாளர் லோகநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story