செங்குன்றம் அருகே பயங்கரம் லாரியை ஏற்றி 2 பேர் படுகொலை; வடமாநிலத்தவர்கள் வெறிச்செயல்


செங்குன்றம் அருகே பயங்கரம் லாரியை ஏற்றி 2 பேர் படுகொலை; வடமாநிலத்தவர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 3 Jun 2022 3:54 AM IST (Updated: 3 Jun 2022 6:39 AM IST)
t-max-icont-min-icon

சப்பாத்தி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் லாரியை ஏற்றி 2 பேர் கொலை செய்யப்பட்டனர். மற்ெறாருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை ெபற்று வருகிறார். இது தொடர்பாக வடமாநில லாரி டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் நெடுஞ்சாலை அருகே லாரிகளை நிறுத்தும் 'பார்க்கிங் யார்டு' நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இங்கு 50-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

அப்போது வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 36), நவீன்(36), செங்குன்றத்தை அடுத்த வடகரையை சேர்ந்த குமரன்(34) ஆகிய 3 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். பின்னர் அங்கு நிறுத்தி இருந்த வடமாநில லாரி ஒன்றின் பின்புறம் அமர்ந்து மது அருந்தினர்.

அந்த வடமாநில லாரியின் டிரைவர் கண்ணையா லால்(32), கிளீனர் கிரிஷ்குமார்(30) இருவரும் சப்பாத்தி செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று 3 பேரும் சப்பாத்தி இருக்கிறதா? என கேட்டனர். வேறு உணவு இல்லாததால் அவர்கள் சப்பாத்தி இல்லை என்று கூறினர். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து வடமாநில லாரி டிரைவர், கிளீனர் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

லாரியை ஏற்றி கொலை

பின்னர் 3 பேரும் மீண்டும் லாரியின் பின்புறம் அமர்ந்து மது அருந்தினர். இதில் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் கண்ணையா லால், தனது லாரியை வேகமாக பின்னோக்கி ஓட்டினார்.

அப்போது லாரியின் பின்புறம் அமர்ந்து இருந்த 3 பேர் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. அவர்களது மோட்டார் சைக்கிளும் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நவீன், குமரன் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே குமரனும் உயிரிழந்தார். நவீன் மட்டும் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்

பின்னர் லாரி டிரைவர், கிளீனர் இருவரும் லாரியை சிறிது தூரம் ஓட்டிச்சென்று நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அங்கு நிறுத்தி இருந்த 5-க்கும் மேற்பட்ட வடமாநில லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

உடனடியாக அங்கு ஆவடி துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர்கள் முருகேசன் தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் அங்கிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

கைது

இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான கமலக்கண்ணன், குமரன் ஆகிய இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லாரி டிரைவர் கண்ணையாலால், கிளீனர் கிரிஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலையான கமலக்கண்ணன், குமரன் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஒன்றாக ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி, கார்களை வாடகைக்கு விட்டு வந்தனர். தற்போது இருவரும் ஒரே நேரத்தில் கொலையான சம்பவம் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையான 2 பேருக்கும் திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர்.


Next Story