2 கும்கி யானைகள் பணி ஓய்வு பெற்றது
முதுமலை புலிகள் காப்பகத்தில் 2 கும்கி யானைகள் பணி ஓய்வு பெற்றது. கள இயக்குனர் வெங்கடேஷ் யானைகளுக்கு பொன்னாடை அணிவித்து பழங்கள் வழங்கி கவுரவித்தார்.
கூடலூர்,
முதுமலை புலிகள் காப்பகத்தில் 2 கும்கி யானைகள் பணி ஓய்வு பெற்றது. கள இயக்குனர் வெங்கடேஷ் யானைகளுக்கு பொன்னாடை அணிவித்து பழங்கள் வழங்கி கவுரவித்தார்.
கும்கி யானைகள் ஓய்வு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் ரோந்து செல்லுதல், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டியடித்தல் உள்ளிட்ட பணிகளில் யானைகள் ஈடுபடுத்தப்படுகிறது.
இந்த நிலையில் அரசு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு 58 வயதில் பணி ஓய்வு வழங்குவது போல் முதுமலையில் பராமரிக்கப்பட்டு வரும் கும்கி யானைகளுக்கும் 58 வயதில் பணி ஓய்வு வழங்கப்படுகிறது. ஏற்கனவே பாமா, இந்தர், அண்ணா, காமாட்சி ஆகிய கும்கி யானைகளுக்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மூர்த்தி, முதுமலை என்ற 2 கும்கி யானைகள் நேற்று பணி ஓய்வு பெற்றது.
பழங்கள் வழங்கினார்
இதைத்தொடர்ந்து பணி நிறைவு விழா முகாம் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி அனைத்து வளர்ப்பு யானைகளும் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து பணி ஓய்வு பெற்ற முதுமலை, மூர்த்தி ஆகிய யானைகளுக்கு நெற்றி பட்டங்கள் சூட்டி, மாலை அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், ஓய்வு பெற்ற கும்கி யானைகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் ஓய்வு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கி யானைகளுக்கு பழங்கள் அளித்தார்.
அப்போது சக கும்கி யானைகள் தும்பிக்கைகளை தூக்கி ஓய்வு பெற்ற யானைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தன. இதில் துணை இயக்குனர் வித்யா, வனச்சரகர்கள் மனோகரன், விஜயன், பவித்ரா, மனோஜ், முரளி, வனவர் சந்தனராஜ் உள்ளிட்ட வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறும்போது,
பணி வழங்கப்படாது
9.7.1967-ம் ஆண்டு 6 வயதான முதுமலை யானை பிடிக்கப்பட்டது. கேரளா, தமிழ்நாடு பகுதியில் பலரை கொன்ற மூர்த்தி யானையை கேரளாவில் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் 12.7.1998-ம் ஆண்டு கூடலூர் வனத்துக்குள் வந்ததால் புளியம்பாறையில் பிடிக்கப்பட்டது. தற்போது 59 வயதாகி விட்டதால் 2 யானைகளுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் முகாமில் பணி வழங்கப்படாது. வழக்கமாக அன்றாடம் வழங்கப்படும் உணவுகள் அளிக்கப்படும் என்றார்.