டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 தொழிலாளிகள் பலி
வந்தவாசி அருகே சாலையோரம் பழுதாகி நின்ற டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே சாலையோரம் பழுதாகி நின்ற டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
கட்டிட தொழிலாளிகள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாந்தோனி (வயது 45), பாலமுருகன் (37), கலைச்செல்வன் (37), முருகன் (43). கட்டிட தொழிலாளர்கள்.
இவர்கள் 4 பேரும் நேற்று செங்காடு கிராமத்தில் கட்டிட வேலைக்கு சென்றனர்.
அங்கு வேலை முடித்துவிட்டு இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் பழஞ்சூர் கிராமத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
டிராக்டர் மீது மோதியது
வந்தவாசி- ஆரணி சாலையில் கீழ்க்குவளைவேடு கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பகுதி மீது இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் தாந்தோனி, பாலமுருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.
பலத்த காயமடைந்த கலைச்செல்வன், முருகன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே ஊரைச் சேர்ந்த 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.