லஞ்ச ஒழிப்பு போலீசார் என்று கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் பறிப்பு


லஞ்ச ஒழிப்பு போலீசார் என்று கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் பறிப்பு
x

திருமயம் அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் என்று கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

லஞ்ச ஒழிப்பு போலீசார்

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் ஞானப்பிரகாசம் என்கிற ஞான பாண்டியராஜ் (வயது 25). இவர் குருவிகளை விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் காரைக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கொசப்பட்டி அருகே வந்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளை 2 பேர் நிறுத்தினர். அப்போது அவர்கள் தாங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் என்று கூறி, ஞானப்பிரகாசமிடம் பேசியுள்ளனர்.

ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் பறிப்பு

அப்போது ஞானப்பிரகாசம் அவர்கள் கேட்டதற்கு எல்லா தகவல்களையும் கூறியுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டுள்ளனர். அதில் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் இருந்துள்ளது. இதை பார்த்தவுடன் அவர்கள் இருவரும் அதனை பறிமுதல் செய்துகொண்டனர். பின்னர் ஞானப்பிரகாசமிடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு கூறியுள்ளனர். பின்பு அந்த 2 பேரும் பணத்துடன் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதையடுத்து ஞானபிரகாசம் திருமயம் போலீஸ் நிலையத்திற்கு வந்து இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது போலீசார் நாங்கள் யாரும் அங்கு வரவில்லை, சோதனையும் நடத்தவில்லை என கூறியுள்ளனர். அப்போது தான் ஞானப்பிரகாசம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

வலைவீச்சு

இதையடுத்து பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகிமான், திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் திருமயம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் என்று கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story