தமிழகத்தில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் கோடி முதலீடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:-
இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், அந்த வளர்ச்சி அனைவருக்கும் பயனளிப்பதாக இருப்பதை உறுதிசெய்வதிலும், கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைப்பதில் இருந்து அதனை செயல்படுத்தும் வரை, பல்வேறு துறை வல்லுனர்கள் மற்றும் தலைசிறந்த பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் உற்பத்தி துறையில் தமிழ்நாடு ஏற்றுமதி கொள்கை, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை, தமிழ்நாடு மின் வாகனங்கள் கொள்கை போன்ற பல்வேறு துறைகளுக்கான தனித்தனிக் கொள்கைகளை வகுத்து அறிவித்துள்ளோம்.
முதலீடுகள் ஈர்ப்பு
குறிப்பாக, பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை தரக்கூடிய தோல் அல்லாத காலணி உற்பத்தியிலும், எதிர்கால வளர்ச்சி துறையான மின்வாகன உற்பத்தியிலும் நாட்டிலேயே அதிக முதலீடுகளை பெற்றுள்ளோம். மொத்தமாக உற்பத்தித் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் மிட்சுபிஷி, பெகட்ரான், ஓலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 241 முதலீட்டு கருத்துருக்கள் மூலம், 2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
2020-21-ம் ஆண்டில் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியில் 4-வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, கடந்த 2 ஆண்டுகளில் முதல் இடத்திற்கு உயர்த்தி உள்ளோம்.
இதுபோன்ற பல்வேறு முயற்சிகளால், நாட்டில் உள்ள மாநிலங்களிலேயே ஏற்றுமதி வளர்ச்சிக்கான தயார்நிலை குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. இவ்வாறு உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகள் பெருகிடும். கல்வியிலும், மருத்துவத்திலும், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1.54 கோடி விண்ணப்பங்கள்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவச் செலவினம் குறைந்துள்ளது. இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் 27 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில், 13 லட்சம் மாணவர்கள் திறன்பயிற்சி பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். இதன் மூலம் 1½ லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 1,978 பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதனால் மாணவர்களின் வருகை உயர்ந்து, இடைநிற்றல் குறைந்துள்ளது. இந்த திட்டத்தை ரூ.404 கோடி செலவில், 31 ஆயிரத்து 8 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 53 ஆயிரத்து 798 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம். செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வருவாய், சொத்துகள், மின் பயன்பாடு போன்ற தகுதி குறியீடுகள் பற்றிய தரவுகளை பல மாதங்களாக தொகுத்து உள்ளோம். இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு உங்களுடைய ஆலோசனைகள் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.