இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையம்


இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையம்
x

கீழ்பென்னாத்தூர் அருகே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஆராஞ்சி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் 2 லட்சமாவது மையம் தொடக்க விழா இன்று நடந்தது.

விழாவுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தினை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து இத்திட்டம் தொடர்பான காணொலி காட்சி, கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார்.

மேலும், திட்டத்தின் புகைப்பட விளக்க புத்தகத்தினை அவர் வழங்க அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

பரிசு கோப்பைகள்

தொடர்ந்து குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்பு இறுதிப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசு கோப்பைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

இல்லம் தேடி கல்வி திட்டம் கடந்த ஆண்டு முதலியார்குப்பத்தில் தொடங்கப்பட்டு தற்போது 2 லட்சமாவது மையத்தினை தொடர் திட்டமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மையம் தொடர் புள்ளி தான்.

அன்று முதலியார் குப்பத்தில் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் பேசும்போது இது வரலாற்று திட்டம் என்றார். முதல்-அமைச்சர் எந்த திட்டத்தை தொடங்கினாலும் அது வரலாற்று சிறப்புமிக்க திட்டமாக இருக்கும். இது ஒரு இனத்திற்கான ஆட்சி என்று அவர் கூறியதன் அடிப்படையில் தான் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

அனுபவமிக்க ஆசிரியர்

அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க முக்கிய புள்ளியாக கல்வி திகழ்கிறது. கல்வியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்காகவே கொரோனா காலத்தில் கல்வி கற்க முடியாத சூழ்நிலையில் முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரப்படி சர்வதேச அளவில் படிக்கும் மாணவர்கள் கல்விக்காக சென்னையைத் தேடி விரும்பி வருகிறார்கள்.

ஏனென்றால் இங்கு இருக்கும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, ஆரோக்கியம், அமைதி ஆகியவற்றை கருத்தில் வைத்துக் கொண்டுதான் மாணவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

பல துறைகளை ஒருங்கிணைக்கும் மையபுள்ளி கல்வி என்று உணர்ந்துள்ள முதல்-அமைச்சரை நாம் பெற்றுள்ளோம். பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரை தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பது பழுத்த, அனுபவமிக்க ஆசிரியர் என்று அவரை பெருமையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லாஉஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், கலெக்டர் பா.முருகேஷ், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், ஓ.ஜோதி, மு.பெ.கிரி , தி.மு.க. மாநில மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனிவாசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story