உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்
கீழக்கரை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சத்தை தாசில்தார் நேரில் சென்று வழங்கினார்.
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி விவேகானந்தபுரத்தை சேர்ந்த பார்வதி மற்றும் அவரது மகள் குப்பம்மாள் ஆகிய 2 பேரும் சின்ன மாயாகுளம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த போது அரசு பஸ் மோதி 2 பேரும் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு பார்வதியின் மகன் உயிரிழந்ததால் அவருக்குப் பிறந்த சதீஸ்வரி (15), கார்த்திகா (10), கப்ளீஸ்வரி (8) ஆகிய 3 பெண்குழந்தைகளையும் பார்வதி தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அதே போல் குப்பம்மாள் தனது கணவரை பிரிந்து தனது தாயார் பார்வதி வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கு நம்புதேவி (15) நம்பேஸ்வரி (9) பாதம் பிரியா (7) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் இருவரும் உயிரிழந்ததால் 6 குழந்தைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு குழந்தைகளின் பெயரில் வங்கியில் புதிய கணக்கு ெதாடங்கி அரசு வழங்கிய நிவாரண தொகையை செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். அப்போது நில அளவை அலுவலர் சொக்கலிங்கம், மாயாகுளம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்.