காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம்
தீ விபத்திற்கு நஷ்ட ஈடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாரியம்மன் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 8.11.2013 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் உற்பத்தி செய்து வைத்திருந்த சேலைகள் அனைத்தும் தீயில் சாம்பலானது. இதன் சேத மதிப்பு மொத்தம் ரூ.28 லட்சத்து 37 ஆயிரத்து 652 ஆகும். இந்த சேத தொகையை வழங்க கோரி சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் நெசவாளர் சங்கத்தினர் மனு செய்தனர். ஆனால் நஷ்ட ஈடு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காததால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மாரியம்மன் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேகர், காப்பீட்டு நிறுவனம் தீ விபத்தில் சேதமான சேலைகளின் சேதமதிப்பு தொகை ரூ.28, 37,652-ஐ உடனே வழங்க வேண்டும் எனவும், அபராதமாக நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு காப்பீட்டு நிறுவனம் சார்பில் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் சவுந்தரராஜன். சாந்தி ஆண்டியப்பன் ஆகியோர் இருந்தனர்.