மாரியம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு


மாரியம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு
x

உடையார்பாளையம் அருகே மாரியம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் நகைகள் திருட்டுப் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர்

மாரியம்மன் கோவில்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே துலாரங்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கடந்த 21-ந் தேதி புத்து மாரியம்மனுக்கு பூஜை செய்துவிட்டு கோவில் பூசாரி கிருஷ்ணமூர்த்தி அன்று இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் கோவிலை திறந்து அம்மனுக்கு அலங்காரம் செய்வதற்காக ஆடைகளை அகற்றும் போது அம்மனின் கழுத்தில் இருந்த 2 தாலி, 4 காசு, 1 சங்கிலி மற்றும் 3½ பவுன் தங்கநகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதையடுத்து, கோவில் பூசாரி கிருஷ்ணமூர்த்தி ஊர் நாட்டார்களிடம் தெரிவித்தார். அதன் பிறகு பூசாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் நாட்டார்கள் அம்மன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story