லாரியில் கடத்தப்பட்ட ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
லாரியில் கடத்தப்பட்ட ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
லாரியில் கடத்தல்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி கண்டோன்மென்ட் போலீசாருக்கு வெளி மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்கள் திருச்சிக்கு கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா உள்ளிட்ட போலீஸ் தனிப்படையினர் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் திருச்சி-தஞ்சை சாலை சர்வீஸ் ரோடு பகுதியில் உள்ள மாடு வதை செய்யும் இடம் அருகே சென்றனர். அங்கு ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. இதனை பார்த்த தனிப்படை போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். மேலும் காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் திருச்சி குமார வயலுரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 45) என்பது தெரியவந்தது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது வெளிமாநிலத்தில் இருந்து திருச்சிக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்து திருச்சி சோமரசம்பேட்டை அருகே குமாரவயலூரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து அங்கிருந்து திருச்சி மாநகரங்களில் வினியோகம் செய்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் குமாரவயலூரில் உள்ள குடோனுக்கு சென்று பார்த்தனர். அங்கு குடோனில் இறக்குவதற்காக லாரியில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (23), லாரி டிரைவர் அப்பானந்த மூர்த்தி (31), பெரியசாமி (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, வேன் மற்றும் லாரியில் இருந்த 300 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் கொண்ட 40 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புைகயிலை பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் கண்டோன்மெண்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகையிலை பொருட்கள் எந்த மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது, புகையிலை பொருட்களை யாருக்கு விற்க முயன்றனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.