ஜீப் மீது பஸ் மோதல்; தொழில் அதிபர் உள்பட 2 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே ஜீப் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழில் அதிபர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் அமல்கிருஷ்ணா (வயது 30). ெதாழில் அதிபர். இவர் தூத்துக்குடி செல்வதற்காக நேற்று இரவு ஜீப்பில் புறப்பட்டார். அந்த ஜீப்பை பெங்களூருவை சேர்ந்த வின்னிமேத்யூ (26) என்பவர் ஓட்டினார். அமல்கிருஷ்ணா பின்னால் அமர்ந்து வந்தார்.
இந்தநிலையில் அவர்கள், கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பிரிவு பகுதியில் வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே கம்பத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. இதில் எதிர்பாராதவிதமாக ஜீப் மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இடிபாடுகளில் சிக்கி அமல்கிருஷ்ணா, வின்னிமேத்யூ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
இதையடுத்து காயமடைந்த அமல்கிருஷ்ணா, வின்னிமேத்யூ ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.