திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 தொழிலாளர்கள் தேடும் பணி தீவிரம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருவெண்ணெய்நல்லூர்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா கெடார் அருகே உள்ள அத்தியூர்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜாமணி மகன் ரகு (வயது 30), குருநாதன் மகன் காத்தவராயன் (32). இதேபோல் மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கார்த்திகேயன் (38). உறவினர்களான இவர்கள், கட்டிட தொழிலாளர்கள் ஆவர்.
நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும், திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் கிராமத்தில் உள்ள தங்களது உறவினரின் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜைக்காக சென்றனர்.
அங்கு பூஜைகள் முடிந்த நிலையில், மாலை 6 மணிக்கு தங்களது வீட்டுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
ஆற்றில் வெள்ளம்
அப்போது, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயனூர் - அருளவாடி இடையே செல்லும் தென்பெண்ணை ஆற்று தரைப்பாலம் பகுதிக்கு வந்தனர்.
இதற்கிடையே விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால், காட்டாற்று வெள்ளம் தென்பெண்ணை ஆற்றுடன் இணைந்து, கரைபுரண்டு ஓடியது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்த நிலையில் ரகு, காத்தவராயன், கார்த்திகேயன் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களை தள்ளிக்கொண்டு தரைப்பாலத்தை கடக்க முயன்றனர்.
கிராம மக்கள் எச்சரிக்கை
அப்போது அங்கிருந்த கிராமத்து மக்கள், ஆற்றில் வெள்ளம் அதிகமாக செல்கிறது, எனவே அந்த வழியாக செல்ல வேண்டாம் என்று தெரிவித்தனர். ஆனால், அவர்கள் காலையில் இந்த வழியாக தான் கடந்து வந்தோம், தற்போதும் ஒன்றும் ஆகாது என்று கூறியபடி சென்றுள்ளனர்.
ஆனால், காலையில் வந்த தண்ணீர் அளவு குறைந்து இருந்தது. மாலையில் வெள்ளம் அதிகமாக ஓடியது. அதே நேரத்தில் இருள் சூழ்ந்து இருந்ததால், ஆற்றில் ஓடும் தண்ணீரின் வேகம் கரையில் இருந்து பார்ப்பதற்கு தெரியாமல் போய்விட்டது.
எனவே, 3 பேரும் ஆற்றுக்குள் நடந்து சென்றபடி மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டே தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். சிறிது தூரம் அவர்கள் சென்ற நிலையில், வெள்ளநீர் அவர்களை அடித்து சென்றது. இதை பார்த்த கிராமத்து மக்கள், அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் கார்த்திகேயனை மட்டும் அவர்களால் மீட்க முடிந்தது. ரகு, காத்தவராயன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
தேடும் பணி தீவிரம்
இது பற்றி திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் என்று 50-க்கும் மேற்பட்டவர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, விசாரித்தனர்.
சிறிது நேரம் தேடிய அவர்கள், இருள் சூழ்ந்ததால், தற்காலிகமாக தேடும் பணியை நிறுத்தினர். இதையடுத்து நேற்று காலை, இருவரையும் தேடும் பணியில் மீண்டும் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதனால் அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
இதற்கிடையே, புகழேந்தி எம்.எல்.ஏ., நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு, துரிதப்படுத்தினார். மேலும் ஆற்றங்கரை பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கிமூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது, தாசில்தார் பாஸ்கரதாஸ், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் பி.வி.ஆர் விஸ்வநாதன், ராஜீவ் காந்தி, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, பிரேமா அல்போன்ஸ், தி.மு.க. விவசாய அணி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.