2 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு இன்று தேர்தல்


2 ஊராட்சி உறுப்பினர்கள்  பதவிக்கு இன்று தேர்தல்
x

நெல்லை மாவட்டத்தில் 2 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது, என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 2 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது, என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

காலி இடங்கள்

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை ஏற்பட்டுள்ள காலி பதவிகளுக்கு தற்செயல் தேர்தலுக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

போட்டியின்றி தேர்வு

களக்காடு யூனியன் படலையார்குளம் ஊராட்சி 8-வது வார்டுக்கு பா.மதன், மானூர் யூனியன் சுண்டங்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டுக்கு முருகையா, பாளையங்கோட்டை யூனியன் கீழப்பாட்டம் ஊராட்சி 1-வது வார்டுக்கு கோமதிசெல்வம், பாப்பாக்குடி யூனியன் திருப்புடைமருதூர் ஊராட்சி 4-வது வார்டுக்கு கோமதி, வள்ளியூர் யூனியன் ஆணைகுளம் ஊராட்சி 6-வது வார்டுக்கு சண்முகபிரியா ஆகியோர் உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் அம்பை யூனியன் வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டுக்கும், சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டுக்கும் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அம்பை, சேரன்மாதேவி யூனியன் அலுவலகங்களில் நடக்கிறது.

தேர்தல் நடக்கிற கிராம ஊராட்சி பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், பொதுத் துறை நிறுவனம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story