3 ஆண்டுகளுக்கு பிறகு 2 பேர் கைது
பண்ருட்டியில் நடந்த மூதாட்டி கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி,
மூதாட்டி கொலை
பண்ருட்டி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பவுனம்மாள் (வயது 85). கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேி வீட்டில் தனியாக வசித்து வந்த பவுனம்மாளை மர்ம நபர்கள் கொலை செய்து, அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையிலும், கொலையாளிகள் யார் என்பதை கண்டறிய முடியாமல் இருந்தது.
தனிப்படை அமைப்பு
இந்த நிலையில், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) பகலவன், இந்த கொலை வழக்கை துரிதமாக விசாரித்து, கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
2 பேர் கைது
இதில், சம்பவம் நடந்த போது, அந்த பகுதியில் பதிவான செல்போன் எண்களை கைப்பற்றி அதன் மூலம் விசாரணையை முன்னெடுத்தனர். இதில், மணப்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன், மேல்அருங்குணத்தை சேர்ந்த வேலாயுதம் ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, பண்ருட்டி பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், பவுனம்மாளை கொலை செய்து நகையை கொள்ளையடித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, விஸ்வநாதன், வேலாயுதத்தை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.