டீக்கடை உரிமையாளரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது


டீக்கடை உரிமையாளரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது
x

டீக்கடை உரிமையாளரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

டீக்கடையில் திருட முயற்சி

திருச்சி செந்தண்ணீர்புரம் ஆகாஷ் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 58). இவர் பாலக்கரை கேம்ஸ்டவுன் திருப்பாச்சி அம்மன் கோவில் அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவர் கடையை திறக்க சென்றார்.

அப்போது, டீக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 2 வாலிபர்கள் திருட முயன்று கொண்டிருந்தனர். இதை பார்த்த ரவிச்சந்திரன் அவர்களை தடுக்க முயன்றார்.

உரிமையாளர் மீது தாக்குதல்

அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.1,200-ஐ பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் ரவிச்சந்திரனை தாக்கி பணம் பறித்தது, கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சந்தோஷ்(21), திருப்பூர் பாரதிநகரை சேர்ந்த சக்திவேல்(21) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி, கத்தி, ரூ.1,200 ஆகியவற்றை பறிமதல் செய்தனர்.


Next Story