வாலிபரை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட 2 பேர் கைது


வாலிபரை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட 2 பேர் கைது
x

வாலிபரை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஓட்டலுக்கு அண்ணாநகரை சேர்ந்த திருக்குமார் (வயது 22) நேற்று மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது அப்பகுதியில் ஒரு கார் வந்தது. காரில் வந்தவர்களுக்கும், திருக்குமாருக்கும் ஒருவரை ஒருவர் முந்திச்செல்வதில் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டு உள்ளது.

உடனே திருக்குமார் தனது அண்ணன் திருமூர்த்திக்கு போன் செய்துள்ளார்.

உடனே திருமூர்த்தி சிலருடன் அங்கு விரைந்து வந்துள்ளார். அப்போது. இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.

துப்பாக்கியால் சுட்டார்

காரில் இருந்த நபர் ஆத்திரம் அடைந்து, கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டி உள்ளார். பின்னர் தரையை நோக்கி சுட்டுள்ளார். மேலும் திருக்குமாரை நோக்கி துப்பாக்கியை வைத்து சுட்டு விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே அங்கு மக்கள் திரண்டதை தொடர்ந்து காரில் வந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், மக்கள் சுற்றி வளைத்தனர். உடனே துப்பாக்கியை அங்கிருந்து எடுத்து ஒரு புதருக்குள் வீசி உள்ளனர்.

2 பேர் கைது

சற்று நேரத்தில் போலீசார் அங்கு விரைந்து வந்து காரில் இருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் புதரில் வீசிய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிவகங்கை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வைரவன் (36), திருவாடானை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (31) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி லைசென்ஸ் பெறப்பட்டதா? இல்லையா? என்பது குறித்தும் லைசென்ஸ் பெறப்படாத துப்பாக்கி என்றால் யாரிடம் வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story