பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது
நாகை மாவட்டத்தில் பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பறவைகள் வேட்டை
நாகை மாவட்டத்தில் மடையான், கொக்கு போன்ற பறைவகளின் வருகை சீசன் தொடங்கி உள்ளது. இந்த பறவைகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலர் தடையை மீறி வலைகள் வைத்து பறவைகளை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இது வனத்துறை சட்டப்படி குற்றமாகும். பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கைது
இந்தநிலையில் தலைஞாயிறு பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக நாகை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனச்சரக அலுவலர் ஆதிலிங்கம் தலைமையில், வனத்துறையினர் தலைஞாயிறு பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மடையான் பறவைகளை வேட்டையாடிய தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைவெளி கிராமத்தை சேர்ந்த தனவந்தன்(வயது28), அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த மடையான் பறவைகளை உயிருடன் மீட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.