பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது


பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது
x

கண்டிராதித்தம் ஏரி பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்

பறவைகள் சரணாலயம்

அரியலூர் மாவட்டம் கரைவெட்டியில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு இலங்கை, பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 45 வகையான பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து தங்கி செல்கின்றன. தற்போது பறவைகளின் வரத்து அதிகளவில் உள்ளதால் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மட்டுமின்றி அதன் அருகே உள்ள பல்வேறு ஏரிகளும் பறவைகளின் தங்குமிடமாக மாறி வருகிறது.

இந்தநிலையில் வெளிநாட்டு பறவைகளை சமூக விரோதிகள் சிலர் உணவுக்காகவும், விற்பனைக்காகவும் வேட்டையாடி வருவதாக பல்வேறு புகார் வந்தது.

2 பேர் கைது

இதன்பேரில் அரியலூர் சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் கண்டிராதித்தம் ஏரி, கரைவெட்டி பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கண்டிராதித்தம் ஏரி பகுதியில் இருந்து 2 பேர் கொக்கை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் அடைக்கலபுரம் கிராமத்தை சேர்ந்த சகாயராஜ் (வயது 33), பிரபாகரன் (23) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story