கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது


கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2023 2:45 AM IST (Updated: 14 Sept 2023 2:46 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

யானை தந்தங்கள்

தேனி மாவட்டம் கம்பத்தில் யானை தந்தம் கடத்தப்படுவதாக மத்திய வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று மதியம் கம்பத்தில், குமுளி சாலையில் உள்ள அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள், சாக்குப்பையுடன் வந்தனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையை சோதனை செய்தனர். அப்போது அதனுள் 3 யானை தந்தங்கள் இருந்தன. அவற்றில் 2 தந்தங்கள் பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இருந்தது.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து யானை தந்தங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் 2 பேரையும் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களில் ஒருவர் தேனி மாவட்டம் கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன் (வயது 32) என்பதும், மற்றொருவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடசிகடவு பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணன் (28) என்பதும் தெரியவந்தது. இவர்கள் யானை தந்தங்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்கண்ணன் மற்றும் முகேஷ்கண்ணனை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு யானை தந்தங்கள் எப்படி கிடைத்தது? அவற்றை விற்பனைக்காக எங்கு கொண்டு செல்ல முயன்றார்கள்? இவர்களுடன் தொடர்புடையவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story