ஆசிரியையிடம் 6 பவுன் சங்கிலியை பறித்த 2 பேர் கைது
பேரளம் அருகே ஆசிரியையிடம் 6 பவுன் சங்கிலியை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நன்னிலம்:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்குமார். இவருடைய மனைவி சக்தி விமலா (வயது30)..இவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கற்கத்தி கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து எண்ணக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து சக்தி விமலா கொல்லுமாங்குடி-கும்பகோணம் சாலையில் கற்கத்தி பாலம் அருகே சென்ற போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சக்தி விமலா கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து சக்தி விமலா பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா மேற்பார்வையில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று பில்லூர் ெரயில்வே கேட் மற்றும் பூந்தோட்டம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கொரடாச்சேரி அருகே உள்ள வடக்கு மாங்குடி பகுதியைச் சேர்ந்த கோகுலேஷ் (20), எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த இமானுவேல் (20) என்பதும், இவர்கள் தான் ஆசிரியை சக்தி விமலாவிடம் இருந்து 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.