மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மோட்டார்சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 32).இவர் தனது மோட்டார் சைக்கிளை திருச்சுழி சாலையில் உள்ள ஒரு வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பணி காரணமாக அவருடன் பணிபுரியும் அலுவலர்களுடன் பஜார் பகுதிக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆனந்தகுமார் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் ஆலோசனையின் படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், உமாலனி போலீசார் கொண்ட தனிப்படை குழு அமைக்கப்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் 2 பேர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இவர்கள் கல்லூரணியை சேர்ந்த முரளிதரன் (26), நாகூர் ஹனி (44) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் ைகது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.