மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
குற்றாலம் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
குற்றாலம் அருகே உள்ள வாஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. மின்வாரிய ஊழியர். இவர் கடந்த 24-9-2022 அன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து குற்றாலம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மேலகரம் பகுதியில் குற்றாலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் திரும்பி சென்றனர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்ற போது மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடினர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது மேலகரத்தைச் சேர்ந்த ராமையா மகன் முருகன் என்ற மெட்ராஸ் முருகன் (வயது 42), வல்லத்தை சேர்ந்த காமராஜ் மகன் முருகேஷ் (32) என தெரிய வந்தது.
அவர்களிடம் விசாரித்தபோது வாஞ்சிநகர் சுடலைமுத்துவின் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். போலீசார் 2 பேரையும் கைது செய்து திருட்டு போன நகைகளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் செங்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
இதில் முருகன் என்ற மெட்ராஸ் முருகன் ஏற்கனவே குற்றாலத்தில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழித்த வழக்கில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர்.