ஆசிரியையிடம் நகை பறித்த 2 பேர் கைது
ஆசிரியையிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்தவர் அன்னலட்சுமி (வயது 34). இவர் தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் பள்ளிக்கு வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது மெயின் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வாளுடன் வந்த 2 மர்ம நபர்கள் அன்னலட்சுமியின் கழுத்தில் இருந்த செயினை பறித்தனர். இதில் அவரது கையில் பாதி செயின் சிக்கி கொண்டது. மீதி உள்ள 12 கிராம் செயினுடன் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது அன்னலட்சுமியின் சத்தம் கேட்டு அருகில் இருந்த போக்குவரத்து காவலர் சதீஷ்குமார், இருசக்கர வாகனத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை பின் தொடர்ந்து விரட்டிச்சென்றார். அப்போது சுப்பிரமணியபுரம் அருகே பொதுமக்கள் உதவியுடன் காவலர் சதீஷ்குமார், அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தார். பின்னர் சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோருடன் சேர்ந்து அவர்களை சாத்தூர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உசிலம்பட்டி தாலுகா முண்டுவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (23), சிவகாசி சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த அழகுராஜா (24) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் சாத்தூர் நகர் போலீசார் கைது செய்தனர்.